மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அம்ரிதி காலனியில் முதன்மை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில், சிக்கன் கறியும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அவற்றில் உள்ள லெக் பீசை ஆசிரியர்கள் சிலர் எடுத்து தங்களுக்கு வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின் மீதமுள்ள சிக்கனின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பிற பகுதிகளை மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர். இதனை கவனித்த மாணவ, மாணவிகளில் சிலர் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால், கொந்தளித்த பெற்றோர்கள் மறுநாள், அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர், 6 ஆசிரியர்களை அறை ஒன்றிற்குள் தள்ளி பூட்டி வைத்தனர். ஏறக்குறைய 4 மணிநேரம் வரை அறைக்குள்ளேயே ஆசிரியர்கள் இருந்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெற்றோரை சமரசப்படுத்தி ஆசிரியர்களை விடுவித்தனர். மேற்கு வங்காளத்தில் கடந்த ஜனவரியில் இருந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், ஊட்டச்சத்து பெற வழங்கப்படும் உணவு தானியங்களை ஆசிரியர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்கின்றனர் என்றும் உணவின் தரம் மோசமடைந்து உள்ளது என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.