2024ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன், எதிர்காலம் குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகில் எங்கு பார்த்தாலும் ஏஐ பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடி தொடங்கி வைத்த இந்த ஏஐ டிரெண்ட், தற்போது உலகெங்கும் உலா வருகிறது. உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கூட ஏஐ மீதான ஆய்வுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான், அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
‘ஏ.ஐ.யின் தந்தை’ என அழைக்கப்படும் ஹிண்டன், சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் கூறுகையில், “அடுத்த 10 ஆண்டுகளில் மனித ஆசிரியர்களை விட, ஏஐ ஆசிரியர்கள் அதிகம் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஒரு ஆசிரியரிடம் இருக்கும் புத்திசாலித்தனம், திறமையை விட இந்த ஏ.ஐ. ஆசிரியர்கள் மூன்று அல்லது நான்கு மடங்கு சிறந்தவையாக இருக்கும் என்று அவர் கணித்துள்ளார். இவை, மாணவர்களின் ஒவ்வொரு தவறான புரிதலையும் சரியாக கண்டறிந்து, தனிப்பட்ட விளக்கங்களை அளிக்க முடியும்” என்று நம்புகிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த ஏ.ஐ ஆசிரியர்களால் பள்ளி – கல்லூரிகளின் தேவை குறைந்துவிடும் என்றும் முதுநிலைப் படிப்புகளில், பல்கலைக்கழகங்கள் தேவை குறைவாகிவிடும் என்றும் கூறியுள்ளார். மில்லியன் கணக்கான மாணவர்களின் கற்றல் முறையை பகுப்பாய்வு செய்து, மனித ஆசிரியர்களைவிட, ஏ.ஐ. ஆசிரியர்கள் சிறப்பாக கற்றுத் தருவார்கள்” என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஒரு பயனர் கூறுகையில், டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள ஒரு பள்ளியில் தினமும் 2 மணி நேரம் ஏ.ஐ. ஆசிரியர்கள் பாடம் எடுப்பதாகவும், இதனால் மாணவர்கள் தேசிய அளவில் 2% இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சிலர், ஏஐ ஆசிரியர்களின் வளர்ச்சியால் மனித ஆசிரியர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்று அதிர்ச்சி அடைவதா..? அல்லது மாணவர்களுக்கு எளிய முறையில், அதிக செலவில்லாத படிப்பு கிடைக்கிறதே என என சந்தோஷப்படுவதா..? என தெரியவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.