ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 2009 மே 31ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1இல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளானதுடன், இந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
சமீபத்தில்கூட, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிறகு, ஆசிரியர் சங்கத்தினருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றிக்கையை அனுப்பியிருக்கிறார். அதாவது, “பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து நிலை ஆசிரியர்கள், பணியாளர்களில் மூத்தோர், இளையோர் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான பரிந்துரைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பணியில் மூத்தவரின் ஊதிய முரண்பாடு சரிசெய்ய, சார்ந்த அலுவலர் நிலையிலேயே ஆய்வு செய்து உரிய விதிகளின்படி பரிந்துரை அனுப்ப வேண்டும். பணியில் மூத்தவர் மற்றும் இளையவர் இருவரின் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் எந்த பக்கமும் விடுபடாமல், சார்ந்த அலுவலர்கள் கையொப்பமிட வேண்டும். ஏற்கெனவே ஊதிய முரண்பாடு சமன் செய்து உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அதுகுறித்த நகல்களை கருத்துகளுடன் இணைத்து அனுப்ப வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.