தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,358 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 45,744 பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளை செய்ய கட்டாயப்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து விதிகளுக்கு உட்படும் தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை காலதாமதம் இன்றி அலுவலக தலைவரான தலைமை ஆசிரியருக்கு கோப்புகளை சமர்ப்பிக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும் தபால்களை அலுவலக தலைவரான தலைமை ஆசிரியர் மூலமாக பெறப்பட்டு அவற்றை முறையாக தன் பதிவேட்டில் பதிவு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் தனி பதிவேடு, முன்கோர் தனி பதிவேடு, படிவம் ஏழு, ஆய்வு குறிப்பு ஆகியவற்றை பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் அலுவலக தலைவரான தலைமை ஆசிரியரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும்.
பராமரிக்கும் ஆய்வு குறிப்பில் அலுவலக தலைவரான தலைமை ஆசிரியரின் ஆய்வு குறிப்புகளையும், படிவம் ஏழு ஆகியவற்றையும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாய்வின் போது அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பம் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் இடைநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.