மும்பை டோம்பிவிலி பகுதியில் 55 வயது நபர் கொலை வழக்கு தொடர்பாக இளம்பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அந்த இளம்பெண்ணும் 55 வயது நபரும் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்துள்ளனர். இதில் முறிவு ஏற்படவே அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில், “சனிக்கிழமை இரவு 55 வயதான மாருதி ஹண்டேவுக்கும் அவரது லிவ் இன் பார்டனரான 27 வயது இளம்பெண் குட்டு ஷெட்டிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு குட்டுவின் நண்பர் சிங்கும் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் குட்டுவும், சிங்கும் சேர்ந்து ஹண்டேவின் தலையில் ஓங்கி பேட்டால் அடித்துள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அவரை அப்படியே அங்கேயே விட்டுவிட்டு குட்டுவும், சிங்கும் தப்பி ஓடினர். அவர்கள் ஓடுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். நாங்கள் வந்து பார்த்தபோது மாருதி ஹண்டே ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு கல்வா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மருத்துவர்கள் அவரை ஜெஜெ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். உடனே அவர் ஜெஜெ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையே குட்டு ஷெட்டி மற்றும் அவரது நண்பர் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது” என்றனர்.