பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஊர் பஞ்சாயத்து வெறும் 5 உக்கிகளை (தோப்புக்கரணங்கள்) தண்டனையாக வழங்கியுள்ளது.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், மிட்டாய் வாங்கித்தருவதாகக் கூறி தனது கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்று 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவரை கிராமத்தில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்தில் நிறுத்தினர். அந்த பஞ்சாயத்தில் சிறுமியை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்திருக்க வாய்ப்பில்லை. அச்சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்ற குற்றத்திற்காக மட்டும் அவரை தண்டிக்கிறோம். அவர் ஊர் பஞ்சாயத்து முன் 5 உக்கிகள் (தோப்புக்கரணங்கள்) போட வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த நபரும் 5 உக்கிகளை அவசர அவசரமாக போட்டுவிட்டு அமர்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த சில இணையவாசிகள் முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு டேக் செய்து சிறுமிக்கு நேர்ந்த அவலத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கவுரவ் மங்கலா கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்” என்றார்.