முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதோடு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முறையிடப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்பான தேதி எதுவும் தெரிவிக்க முடியாது எனவும் அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.