முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது என்றும் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை திரும்ப பெறுவதாகவும், வழக்குகளை ரத்து செய்யக்கோரி குற்றவியல் பிரிவில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலுமணி சார்பில், கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள், விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது என்றும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அடுத்த 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.