பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள முக்கிய பகுதி பலூசிஸ்தான். இங்கு மஸ்டங் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பிரபல மசூதி ஒன்று அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் இஸ்லாமியர்கள் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்றும் அந்த மசூதிக்கு ஏராளமானோர் தொழுகைக்கு சென்றனர். இதனால், மசூதிக்கு வெளியேயும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென மசூதி அருகே குண்டுவெடித்தது. இதில், 52-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், தற்கொலைப் படை தாக்குதலினால் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், மஸ்டங் நகர துணை போலீஸ் கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்துள்ளார். சம்பவம் அறிந்த பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்த குழந்தைகள் ரத்தக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை கலங்க வைக்கிறது.