பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹாஸ் சாலையில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் இன்று (நவம்பர் 25) ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
RJ ஷாப்பிங் மாலில் சிக்கியிருந்த சுமார் 50 பேர் இரண்டு ஸ்நோர்கல்கள், 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு பவுசர் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்டுகிறது. மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், அனைவரையும் மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது ஒரு மாடியில் குளிரூட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்டுகிறது.
முதலில் காலை 7 மணியளவில் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் வணிக வளாகத்தின் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்களுக்கும் பரவியது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. “காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமை தீயணைப்பு அதிகாரி முபீன் அகமது கூறுகையில், மாலின் கட்டிடம் இரண்டாவது முறையாக தீப்பிடித்தது. “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது,” என்று அவர் கூறினார். கராச்சி துணை கமிஷனர் (டிசி) சலீம் ராஜ்புத் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார், “பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும். நாளை முதல், அனைத்து துணை கமிஷனர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குறித்த தரவுகளை சேகரிப்பார்கள், ”என்று அவர் கூறினார்.
கராச்சி மேயர் முர்தாசா வஹாப் சித்திக் சமூக ஊடக தளமான X இல், தீ விபத்திற்குப் பிறகு குறைந்தது ஒன்பது உடல்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக உறுதிப்படுத்தினார். “தேடல் செயல்முறை தொடர்கிறது,” என்று பதிவிட்டுள்ளார்.