சென்னையில் உயர்ந்து வரும் கடல்மட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நகரின் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் முதன்மையானதாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல முக்கிய நகரங்கள் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. உயர்ந்து வரும் கடல் மட்டம், அதிகரித்து வரும் வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் இந்தியாவிலும் பல்வேறு முக்கிய நகரங்கள் பாதிக்கப்படலாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை பாதுகாப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை என்பது சென்னை நகரை காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்ய துண்டும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ. உயரக்கூடும். அவ்வாறு உயர்ந்தால் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும். சென்னையில் கடல் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கணிக்கப்பட்ட வெள்ள அபாயங்களின்படி இது 100 ஆண்டுகளில் 56.5 சதவீத பகுதிகளை பாதிக்கும். அடுத்த 100 ஆண்டுகளில் 68 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை சந்திக்கும். மேலும் இந்த காலக்கட்டத்தில் சென்னை போக்குவரத்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்களின் 45 சதவீத அடிப்படை கட்டமைப்புகள் பாதிக்கப்படும். தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தியானது பிற இடங்களை ஒப்பிடும்போது சென்னையில் 2 மடங்கு அதிகமாக உள்ளதால், இது மிகவும் முக்கிய பிரச்சனையாகும். மேலும் கடல் மட்டம் உயர்வதால் 2100ஆம் ஆண்டில் 16 சதவீத பகுதி அதாவது சென்னையில் 67 சதுர கிலோமீட்டர் பரப்பு முழுமையாக நீரில் மூழ்கும் எனவும், இதனால் சுமார் 215 குடிசை பகுதிகள் உள்பட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் என மொத்தம் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 2018-19ஆம் ஆண்டுக்கான பசுமை இல்ல வாயு வெளியேற்றம் என்பது குடியிருப்பு கட்டடங்களில் இருந்து 31% உள்ளது. வணிகம் மற்றும் நிறுவனங்களின் கட்டடங்களை பொறுத்தமட்டில் 26% என்ற அளவில் இருந்தது. உற்பத்தி மற்றும் கட்டுமான தொழில்கள் 11% என்ற அளவிலும், எரிசக்தித் தொழில்கள் 2% அளவுக்கு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் பங்களித்தன. குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் 70% அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைத்து பெரு நகரங்களும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னைக்கான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, பின்னர் வரும் காலங்களில் வராமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.