சென்னை பாரிமுனை வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார். இவரது
மனைவி ராஜஸ்ரீ. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கும் புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி சேட்டு கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று (டிச.20) பிரேம்குமார் அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரது கூட்டாளிகள் வசந்தகுமார், நரேஷ்குமார் ஆகியோரும் உடன் வந்தனர்.
கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு, பெரியமேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் நடுவே உள்ள தந்தூரி என்ற உணவகத்தில் மேல் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, 7 பேர் கொண்ட கும்பல் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பிரேம்குமார், வசந்தகுமார், நரேஷ் ஆகியோரை பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். அப்போது பிரேம்குமாரை மட்டும் வெளியே இழுத்து வந்து கொடூரமாக வெட்டி விட்டு தப்பி சென்றது அந்த கும்பல். இதில் வசந்த குமார், நரேஷிற்கு வெட்டுவிழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரேம் குமாரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் அரிவாள் வெட்டு விழுந்த நரேஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டு காயத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.