திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடிந்து திரும்பிய போது, அவரின் காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நிதி நிறுவனம் நடத்திய அவரது சகோதரர் ரூ.3 கோடி கடன் பெற்ற நிலையில், பணத்தை திரும்பச் செலுத்தாததால் இசை கலைஞர் தேவ் ஆனந்த் கடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடத்தல் சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தேவ் ஆனந்தை கடத்திச் சென்ற மர்ம கும்பலை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.