உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் நேற்று மாலை வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பன்பூல்புராவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பன்பூல்புராவில் ஆட்சியர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்ட உடன் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நைனிடால் மாவட்ட மாஜிஸ்திரேட் இதுகுறித்து பேசுகையில், ”பன்பூல்புரா வன்முறையில் இதுவரை மூன்று முதல் நான்கு பேர் இறந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், கற்களை வீசியதாகவும், குறைந்தது 100 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டதை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகரின் பன்பூல்புரா பகுதியில் நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மதரஸாவை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் காயமடைந்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பன்பூல்புராவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் முக்கிய நகரத்திற்கு பரவ அனுமதிக்கப்படவில்லை. துணை ராணுவ படைகளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் படையும் நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைநகர் டேராடூனில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் இந்த வன்முறை குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.