Kashmir: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) நடந்த பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் உறவினர் காயமடைந்தனர்.
தெற்கு காஷ்மீரின் மிகப்பெரிய பாதுகாப்பு மையங்களில் ஒன்றான பெஹிபாக் நகரில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு அருகில் காரை வழிமறித்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், முன்னாள் ராணுவ வீரர் Manzoor Ahmad Wagay கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் உறவினர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் முழு அடைப்பு காணப்பட்டது, அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குல்காமின் பெஹிபாக் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னாள் ராணுவ வீரர் Manzoor Ahmad Wagay மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தாக்குதலில் அவரது மனைவி மற்றும் அவரது சகோதரியின் மகளும் காயமடைந்தனர். வாகையின் வயிற்றில் காயம் ஏற்பட்டதாகவும், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரியின் மகளின் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் யார், எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்த தகவல் உறுதிப்படுத்தவில்லை, அவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். “பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு வாகை பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் அவரது மனைவியும், உறவினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1990களின் முற்பகுதியில் காஷ்மீரில் கிளர்ச்சியை எதிர்க்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இக்வான் என்ற சிவில் போராளிக் குழுவுடன் Manzoor Ahmad Wagay பணியாற்றி வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் அவர் பிராந்திய இராணுவத்தில் சேர்ந்தார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் போராடுவதாக சபதம் செய்த சில நாட்களுக்குப் பிறகு, நடத்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.