Terrorist attack: பந்திபோராவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலடி கொடுத்ததையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் சக தொழிலாளர்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. புத்கம் மாவட்டத்தில் நீர்வளத்துறையில் தினக்கூலியாக வேலை செய்து வருபவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷோபியான்,25, உஸ்மான் மாலிக், 25. இந்த நிலையில், இந்த இருவர் மீது தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். 12 நாட்களுக்கு முன்பு இசட் மோர் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், வடக்கு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் உள்ள 14 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினரின் முகாம் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு (நவம்பர் 1) 9.30 மணி அளவில் தாக்குதல் நடத்தினர். முகாமிற்கு வெளியில் இருந்த காவலர்களை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நோக்கி பதிலடி கொடுத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு அமைந்த பிறகு பயங்கரவாதிகள் நடத்திய ஐந்தாவது தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக, அக்டோபர் 24 அன்று, சுற்றுலாத் தலமான குல்மார்க்கிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் மற்றும் இரண்டு போர்ட்டர்கள் வீரமரணம் அடைந்தனர், மற்றொரு போர்ட்டர் மற்றும் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தனர். முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுபம் குமார் என்ற தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக் காயப்படுத்தினர்.
அக்டோபர் 20 அன்று, கந்தர்பாலின் ககாங்கிர் பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதை கட்டுமான தளத்தில் ஒரு உள்ளூர் மருத்துவரையும், உள்ளூர் அல்லாத ஆறு தொழிலாளர்களையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அக்டோபர் 18 அன்று, ஷோபியான் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
Readmore: அதிர்ச்சி!. பயங்கரவாதிகளின் பாலியல் கொடூரம்!. 130 பெண்கள் தற்கொலை செய்துகொண்ட அவலம்!