உகாண்டாவில் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு உகாண்டாவில் காங்கோ எல்லை அருகே உள்ள பள்ளி ஒன்றுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது. அவர்கள் ஆண்கள் விடுதியை நோக்கி வெடிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். பள்ளியில் இருந்து வெளியேற முற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் மீதும் பயங்கரவாதிகள் கத்தியால் குத்தி கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இந்த தாக்குதலில், தீயில் உடல் கருகி 20 பேரும், கத்திக்குத்தில் காயம் பட்டு 17 மாணவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 4 ஊழியர்களும் இத்தாக்குதலில் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்த ராணுவம் மற்றும் காவல்துறையினர் பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பல மாணவிகளை காணவில்லை என்று கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். 37 மாணவர்கள் உட்பட 41 பேரின் உயிரை பறித்த இக்கொடூர தாக்குதல் உகாண்டாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.