எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கார் தயாரிப்பு தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு அரசு சில சலுகைகளை அளிக்க முன்வந்ததை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அண்மையில் அமெரிக்கா சென்றபோது, எலான் மஸ்க் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தநிலையில், நீண்ட இழுபறிக்குப்பின், டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார கார்களை தயாரிக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டு இறக்குமதியுடன், உள்நாட்டு உற்பத்திக்கும் ஊக்கம் அளிக்கும் திட்டமாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின் தொடக்க விலை 20 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெஸ்லா இந்தியாவை மையமாக வைத்து இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் கார்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.