ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கிடையே தான் கடந்த 6ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனைதாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது. அப்போது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பபட்ட ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகியோரை பறக்கும் படையினர் கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.4 கோடி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் தான் பணத்தை தந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோரை அழைத்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது , ‛‛நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் தான் பணத்தை அனுப்பி வைக்க கூறினார்” என்று முருகன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் வழங்கினர். அதில் மே 2ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது.
இதற்கிடையேதான் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 26ம் தேதி மாற்றி உத்தரவிட்டார். ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மேலும், தாம்பரம் போலீசார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் புதிதாக வழக்கு பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இவர்கள் 2 பேரும் மே 2ஆம் தேதி காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணை தொடர்ந்து வருகிறது. மேலும் முக்கிய விஷயங்களை போலீசார் வாக்குமூலமாக பெற உள்ளனர். அதன்பிறகு நயினார் நாகேந்திரனுக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.