தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது இதனால்அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
தைவானின் யூஜிங்கிற்கு கிழக்கே 7.2 என்ற அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் தலைமட்டமானது. இந்திய நேரப்படி மதியம் 2.44 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர் பல இடங்களில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
சீனிக் சிக்கே மற்றும் லியூஷிஷி மலைப்பகுதியில் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டதால் 600க்கும் மேற்பட்டோர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பகுதியில் மேம்பாலம் துண்டிக்கப்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல யூலி மாவட்டத்தில் இரண்டு அடுக்கு கட்டிடம் ஒன்று தரைமட்டமானது இதில் 2 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் அசையும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது..
தைவானில் உள்ள பள்ளி ஒன்றில் உள் விளையாட்டரங்கத்தில் நிலநடுக்கத்தின்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்த காட்சியும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.