தல தோனியின் மாஸ் என்ட்ரி குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 16வது சீசன் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சீசன் தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதனை வழிநடத்தும் தலைவரான தோனியை பற்றிதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை நிகழ்த்திவருகிறது. இதுமட்டுமின்றி தோனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் தொடங்கி கிராமம் வரை உள்ளது. இப்படியான பேரன்பிற்குரிய ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ள தோனியின் கடைசி போட்டி எதுவாக இருக்கும் என்ற கேள்வி அவர்களது ரசிகர்களிடத்திலும் உள்ளது. இயல்பாகவே இவருக்காக மைதானத்திற்கு வந்து போட்டியைப் பார்ப்பவர்கள் ஏராளம். ஓய்வு குறித்து இன்னும் தோனி என்ன முடிவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். பல திடீர் முடிவுகளுக்கு சொந்தக்காரரான தோனி, ஒருவேளை நடப்பாண்டு விடைபெற்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் கடைசியாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று கூடும் கூட்டம் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிகள் எங்கு நடந்தாலும், மஞ்சள் படைகள் மைதானத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன
மைதானத்திற்குள் தோனியை எப்படியாவது பார்த்துவிடமாட்டோமா என ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க, களத்திற்கு உள்ளே தோனியிடம் எப்படியாவது பேசிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தோடு இளம் வீரர்கள் அவரையே சுற்றி சுற்றி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், அவர் மைதானத்திற்கு என்ட்ரி கொடுத்து ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர், ஒரு ஸ்டெம்பிங் அப்பறம் ஒரு ரிவியூ இது போதும் எனக்கு என அனைவரையும் வசியம் செய்து வைத்துள்ள தோனி நிஜ உலகின் பாட்ஷாவாக வலம் வருகிறார். அதாவது, கடைசி ஓவர் சிக்ஸ் மைதானத்திற்குள் இடி முழங்க வைக்கிறது. சி.எஸ்.கே அணி தோல்வியை சந்தித்தால் என்ன? தோனி அடித்த அந்த கடைசி ஓவர் சிக்ஸருக்கு என்றும் அடிமை என்று ரசிகர்கள் சொக்கிக்கிடக்கின்றனர்.
இந்தநிலையில், மைதானத்திற்குள் தோனியின் என்ட்ரியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி நெகிழ்ச்சியான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஒருமுறையாவது தோனி களத்திற்கு வருவதை நேரில் கண்டுகளித்துவிட வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் வேண்டுகோள் விடுத்து உள்ளார். தோனியைப் பாராட்டிப் பேசிய பின்ச், தோனி மைதானத்திற்குள் களமிறங்குவதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்றும், அது ஆகச்சிறந்த அனுபவம் என்றும் தெரிவித்து உள்ளார்.
நடிகரும் WWE மல்யுத்த வீரருமான ஜான் சீனா , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்தில் ஐபிஎல் 2023 போட்டியின் போது, ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து, ஜான் சினாவின் சின்னமான ‘நீ என்னைப் பார்க்க முடியாது’ என்ற சைகையை தோனி செய்வதைக் காணலாம். இதன் காரணமாக ஜான் சீனா தோனியின் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “இதை நம்ப முடியவில்லை” எனவும், ஜான் சினாவும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்க்கிறார் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.