தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை பார்வதி இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிஷோர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் வாழ்ந்த மக்களின் போராட்ட கதையை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் இயக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முடிந்த பின் ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு தங்கலான் திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று இப்பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை பார்வதி இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு பகிர்ந்து வாழ்த்தியுள்ளது. கங்கம்மா எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ள நிலையில், பிறந்த நாள் வாழ்த்துகள் கங்கம்மா என இயக்குநர் பா.ரஞ்சித் பார்வதியை வாழ்த்தியுள்ளார்.