தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா, அன்று என்ன நடந்தது என்பதை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ரமணி நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். முதல் பாடவேளையில் தனக்கு வகுப்பு இல்லை என்பதால் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் அமர்ந்து இருந்திருக்கிறார். அப்போது பள்ளி தொடங்கியதும் ஆசிரியர்கள் சிலர் பாடம் நடத்த வகுப்பறைக்கு சென்று விட்டனர். காலை 10.10 மணி அளவில் மதன்குமார் பள்ளிக்கு வந்தார். மதன்குமார் பள்ளி வளாகத்திற்குள் வரும்போது மாணவருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆசிரியர்கள் யாரும் கவனிக்கவில்லை.
அவர்கள் வகுப்பறையில் இருந்தார்கள். ஆசிரியை ரமணி எங்கே இருக்கிறார்? என மதன்குமார், மாணவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அவர் ஓய்வு அறையில் இருந்த ரமணியை சந்தித்து மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்திருக்கிறார்.
ஆனால் ரமணி பிடிவாதமாக உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதுடன் உடனடியாக பள்ளியை விட்டு வெளியே செல்லும்படி மதன்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த மதன்குமார், தான் மறைத்து வைத்து இருந்த மீன்வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு ரமணியின் கழுத்தில் சரமாரியாக குத்தியிருக்கிறார். கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியால் ரமணி நிலைகுலைந்து தரையில் விழுந்தார். அப்போது வலி தாங்க முடியாமல் கதறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்களும், மாணவர்களும் அங்கு ஓடி வந்தனர். அப்போது அவர்கள் கத்தியோடு தப்பி ஓடிய மதன்குமாரை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தார்கள். படுகாயம் அடைந்த ரமணியை மாணவர்களும், ஆசிரியர்களும் தூக்கிக் கொண்டு பள்ளிக்கு வெளியே வந்து ஆம்புலன்ஸ்சில் ஏற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். சாப்பாடு கொண்டு வருகிறார் என்று நினைத்தோம். ஆனால் ஆசிரியையை சாகடிக்க வருவார் என்று எங்களுக்கு தெரியாது” என கண்ணீர் மல்க சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா கூறினார்.
Read more ; மீண்டும் மீண்டுமா.. ரூ.57 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!! – இல்லத்தரசிகள் ஷாக்