தமிழக பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், விரைவில் களத்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.
நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அண்மையில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்பதலின்படி காயத்ரி ரகுராம், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக, பாஜக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அறிவித்தார்.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரை கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி. என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்தற்கு நன்றி. பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.
