மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போது மழை வெள்ள பாதிப்பு வந்தாலும் சரி, புயல் அடித்தாலும் சரி, மக்களை காக்கும் பணியில் முன்னணியில் வந்து நிற்பவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். குஜராத் பூகம்பம், சுனாமி போன்ற தேசத்தை உலுக்கிய பல சோக நிகழ்வுகளுக்கு தன்னுடைய சொந்தச் செலவில் நிவாரணங்களை வழங்கி உதவியவர்.
கடந்த 2018ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்தார் விஜயகாந்த். குஜராத் பூகம்பம், ஒரிசா புயல் போன்றவற்றிற்கு அதிக நிதி வழங்கியதற்காகவும், ஏழை மாணவ, மாணவியரின் கல்விக்கு உதவியதற்காகவும் 2001ஆம் ஆண்டு Best Citizen of India என்ற விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றவர் விஜயகாந்த்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகும் கூட, தானே புயல், ஆந்திரா புயல், ஒடிசா வெள்ளம் என பாரபட்சமின்றி முதல் ஆளாக முன் வந்து நிவாரணங்கள் வழங்கியவர். 2020இல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கவும், சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை இருந்தபோது, தன்னுடைய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், தேமுதிக தலைமை அலுவலகத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசை கேட்டுக்கொண்டார் விஜயகாந்த்.
இதோ இன்று சென்னை மழையில் தவிப்போருக்கும், அவரது தேமுதிக அலுவலகம், பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அக்கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும், தேமுதிகவை சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவியை பூர்த்தி செய்ய வேண்டும். “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற நமது தலைவரின் கொள்கை படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து உதவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Read More : கனமழையால் விடுமுறை..!! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்..!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!!