‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகனை, மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி போலீசார் கைது செய்வது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், கைதான சில மணி நேரத்திலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.
‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் மலையாள நடிகர் விநாயகன். கேரளாவைச் சேர்ந்த இவர், எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து அதிகளவு சத்தம் வந்ததாக அக்கம்பக்கத்தினர் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மதுபோதையில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட விநாயகன், அங்குள்ள அதிகாரியை தாக்கி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், எர்ணாகுளம் வடக்கு காவல்துறையினர் விநாயகனை கைது செய்தனர். காவல் நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததால், அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், விநாயகன் மதுபோதையில் இருந்ததை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீஸ் அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார் விநாயகன். இதையடுத்து, கேரள போலீஸ் சட்டத்தின் ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரவு 10.30 மணியளவில் விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.