சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் நடைபெறும் ஆசிய ஆடவர் ஹாக்கி தொடருக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தியுள்ளன. இந்தியா, தென்கொரியா, மலேசிய, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் இத்தொடர், ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதனை தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு மலேசியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
இரவு 8.30 மணிக்கு இந்திய அணி சீனாவை எதிர்கொண்டு விளையாடுகிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 7 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், சீனா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. டிக்கெட் விற்பனை, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பாக்ஸ் கவுண்டர்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. டிக்கெட்டுகள் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.