தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று (மார்ச் 25) டெல்லி விரைந்தார். டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட அவர், நேற்றிரவு 8.15 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின்னர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து பேசவே இல்லை. மக்கள் பிரச்சனைகள், நிதி ஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசினோம். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அவரிடம் எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். டாஸ்மாக் ஊழல் குறித்து பேசினோம்.
நாடாளுமன்ற மறுசீரமைப்பு குறித்து அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம். முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசவே அமித்ஷாவை சந்தித்தோம். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கும். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை. கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும். ” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகு அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “2026இல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.