சென்னை மற்றும் கோவை தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளில் பெற்றோரிடம், பொறுப்பு துறப்பு படிவத்தில் பள்ளி நிர்வாகம், பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் இதே போல பெற்றோரை கையெழுத்து கேட்டு வற்புறுத்ததாகவும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நடந்த போராட்டங்களும் கலவரங்களும் அனைவரும் அறிந்ததே. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ப 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று பள்ளியின் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவாகரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்ததோடு, வழக்கு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். கடந்த பத்து நாட்களில் மட்டும் 7 தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் பள்ளி வளாகங்களில் நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தின் போது தனியார் பள்ளி சேதப்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளி கூட்டமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்பொழுது தனியார் பள்ளிகளில் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு எதுவும் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகத்திடம் கேட்கக் கூடாது என பெற்றோர்களை சில பள்ளி நிர்வாகத்தினர், வற்புறுத்தி கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்தது. கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஆர் தாமோதரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் பொறுப்பு துறப்பு படிவம் ஒன்றில் வற்புறுத்தி கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்தது. அந்த படிவத்தில் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என அந்த படிவத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த படிவத்தில் கையெழுத்திடாவிட்டால் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் செல்லுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால் பள்ளி நிர்வாக தரப்பில், படிவத்தில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது உண்மைதான் எனவும், ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதே பாணியை பின்பற்றி தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில், குறிப்பாக நாமக்கல், கோவை, விழுப்புரம், உள்ளிட்ட பள்ளிகள் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் கருதியே பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்க்கும் நிலையில் அதற்கு முழு பொருப்பையும் பள்ளி நிர்வாகத்தினரே ஏற்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது எனவும் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு சிலர் இது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.