இஸ்ரேலுக்கு முழு ஆதரவு என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் டெல் அவிவ் நகருக்கு சென்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலுக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் சென்றடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை மேலும் தெளிவாக உறுதிப்படுத்தும் வகையிலே இந்த சந்திப்பு உள்ளது.
இஸ்ரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய போர் நிலவரம், பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்கர்களின் நிலை என்ன? மற்றும் இஸ்ரேலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலிலே கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் விவரம் என்ன போன்றவற்றை எல்லாம் கேட்டு அறிந்திருக்கிறார்.
ஹமாஸ் தீவிரவாத தாக்குதலிலேயே இஸ்ரேலியர்களை தவிர பல அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆகவே, அமெரிக்கர்களின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள மிகவும் அமெரிக்கா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தூதரக அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தான் ஆண்டனி பிளிங்கன் நேரடியாக சென்று இஸ்ரேலுக்கு முழு ஆதரவு என மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.
அதே போல இந்த மோதலில் காசாவில் இருந்து 3. 40 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருக்கலாம் என ஐநா மதிப்பீடு செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.