மணிப்பூரில் மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தே சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. மணிப்பூரில் இணைய சேவையை மீட்டெடுத்த 2 நாட்களில், மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 6ஆம் தேதி முதல் காணாமல் போன 2 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மணிப்பூரில் அக்டோபர் 1ஆம் தேதி இரவு 7.45 மணி வரை ஐந்து நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் டேட்டா சேவைகள் மற்றும் இணையதள சேவைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை அன்று இம்பாலில் 2 மெய்தே மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து பரவலான சீற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவையை தற்காலிகமாக முடக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள், பொய்யான வதந்திகள் மற்றும் பிற வன்முறைச் செயல்கள் பரவுவதை அரசு தடுக்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.