திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்துள்ள சோதியம் பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் கடந்த 24 ஆம் தேதி தன்னுடைய பெற்றோரிடம் விளையாட செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அந்த சிறுவனை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியதாக தெரிகிறது.
அதே கிராமத்தில் இருக்கின்ற ஏரிக்கரையில் அந்த சிறுவன் மயங்கி கிடந்தது தெரிய வந்ததை தொடர்ந்து, சிறுவனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அதன்பிறகு உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
மயக்கம் தெளிந்த உடன் அந்த சிறுவனிடம் நடந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அப்போது சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக வாயில் மதுபானத்தை மனோஜ் என்பவர் உள்ளிட்ட சிலர் ஊற்றியதாக அந்த சிறுவன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அந்த சிறுவனின் தந்தை வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, தூசி காவல் துறையினர் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விளையாடுவதற்காக சென்ற சிறுவனை அழைத்து அவனுடைய வாயில் மதுபானத்தை வலுக்கட்டாயமாக ஊற்றிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருக்கின்ற பிரபல தனியார் மதுபான கூடம் ஒன்றில் சிறுவனை அமர வைத்துக்கொண்டு இளைஞர்கள் மது பிடிக்கும் காட்சி வெளியான நிலையில், 11 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றியுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
2 சம்பவங்களிலும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.