விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ”ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவர் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, வனக்காப்பாளராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். பணியிலிருந்தபோது, செய்த தவறுக்காக தண்டிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இவரின் முதல் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் தனிமையில் இருந்து வந்த வெள்ளையன், 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கணவனை இழந்து, 4 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் என 7 பிள்ளைகளுடன் வசித்து வந்த பெண் ஒருவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார் வெள்ளையன். இவர்கள் அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் வாழ்ந்து வந்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் வெள்ளையன், கடந்த ஒரு வருடமாக வேலையில்லாமல் கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய, 15 வயது மகளுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறுமி, அரசு மருத்துவமனைக்குச் சென்று ஊசி போடச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிறுமி அனுப்பிவைக்கப்பட்டதும், இது குறித்த தகவல் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குவந்த மாவட்ட அதிகாரி மீனாட்சி, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அவரின் கர்ப்பத்துக்கு காரணமானது வெள்ளையன்தான் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளையன் மீது மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மீனாட்சி புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து வெள்ளையனைப் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, வெள்ளையன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.