fbpx

இன்று தொடங்கிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!… அரசியல் ரீதியிலான விவாதங்கள் நடக்கலாம் என எதிர்பார்ப்பு!

நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. மக்களவையின் கடைசி மற்றும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதால் அரசியல் ரீதியிலான விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நாளை தாக்கல் செய்ய உள்ளார். கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த பிரச்னை குறித்தும் விவாதிக்க தயார் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதுள்ள, 17வது மக்களவையின் பதவிக்காலம், வரும், மே மாத இறுதியில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று துவங்கி, வரும், 9ம் தேதி வரை நடக்க உள்ளது.

வழக்கமான நடைமுறைகளின்படி, ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்த மக்களவையின் கடைசி மற்றும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதாலும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டத்தொடரில் அரசியல் ரீதியிலான விவாதங்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், அதன் மீது பிரதமரின் நன்றி உரை ஆகியவையே, இந்தக் கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று தெரிவித்தார். கூட்டத்தொடரை சுமுக மாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்ற பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள், இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதாவது, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மணிப்பூர் நிலவரம், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆளுநர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் கேள்வி எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் தொடர்பாக, அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது, அனைத்துக் கட்சி கூட்டம் சுமுகமாக நடந்தது. இது குறுகிய கால கூட்டத்தொடராக இருந்தாலும், எந்தப் பிரச்னை குறித்தும் சபையில் விவாதிக்க தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது, சபையை அவமதிக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக, 146 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், 132 பேர் அந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில், 14 பேரின் நடவடிக்கைகள் தீவிரமானதாக இருந்ததால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முடித்துக் கொள்ள இரண்டு சபையின் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதனால், இவர்களும், பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கலாம் என்று பிரஹலாத் ஜோஷி கூறினார்.

Kokila

Next Post

மக்களே...! தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் இரண்டு முக்கிய மாற்றம்...! என்ன தெரியுமா...?

Wed Jan 31 , 2024
தமிழகத்தில் நாளை முதல் வரும் இரண்டு முக்கிய மாற்றங்கள். மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் […]

You May Like