நாட்டின் குற்றவியல் நீதிமுறையை விரிவாக ஆய்வு செய்வது தேவை என மத்திய உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அதன் 146-வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழுவின் 111-வது, 128-வது அறிக்கைகளும் அளித்துள்ளன.
மக்களை மையப்படுத்திய சட்டக்கட்டமைப்பை உருவாக்கவும், அனைவருக்கும் நியாயமான, விரைவான நீதி கிடைக்கச் செய்வதற்கும் நாட்டின் குற்றவியல் சட்டங்களில் ஒருங்கிணைந்த மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், பங்குதாரர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து இந்தியத் தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, இந்திய சாட்சியச் சட்டம், 1872 போன்ற குற்றவியல் சட்டங்களில் ஒருங்கிணைந்த திருத்தங்களைக் கொண்டுவரும் நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், இந்திய பார்கவுன்சில், மாநிலங்களின் பார்கவுன்சில், சட்டப் பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனைகளை உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.