குஜராத்தில்தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது என்றும் மத்திய அரசு இதனை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மத்திய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு பரவி உள்ளது. முத்ரா துறைமுகம், விஜயவாடா துறைமுகத்தில் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குஜராத்தில் உள்ள தனியார் துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போதைப் பொருளைத் தடுக்கும் வகையில் காவல்துறை, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி போதைப் பொருள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர். மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. துறைமுகங்களை தனியாருக்கு கொடுக்கும் நிலையை மாற்றி அமைத்தால் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும். போதை பொருள் விற்பனையில் இதுவரை 20,240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.