அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்காப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதனை ஓபிஎஸ் அணியினர் ஏற்க மறுத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தது, எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தது என தமிழக அரசியலில் அதிமுகவை சுற்றி பல்வேறு அதிரடிகள் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றன. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் இன்னும் தனது முடிவை அறிக்காத நிலையில், ஆணையத்தின் முடிவு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியது. இதில், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணிகள் தரப்பில் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இருதரப்புக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெராமன் கலந்துகொண்டனர். ஓபிஎஸ் அணி சார்பில் கோவை செல்வராஜ் கலந்துகொண்டார். மூவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். முதலில் கூட்ட அரங்கிற்கு வந்த கோவை செல்வராஜ் அதிமுக என்று வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை முன்பு அமர்ந்தார். பின்னர் வந்த ஜெயக்குமார், அந்த போர்டை தமது பக்கம் இழுத்து வைத்துக்கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ”அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் அவர் கூறினார். புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் படிவம் 6ல் ஆதார் எண் இடம் பெறும் வகையில் அச்சிடப்பட்டு, 2023 மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சத்யபிரதா சாகு கூறினார். ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் படிவம் 6 Bல் ஆதார் எண் அல்லது இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.