fbpx

PTK: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா…! மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்…!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் அவர்களின் திடீர் ராஜினாமா ஏன்..? என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமாக அங்கமாக விளங்குவது நாடாளுமன்றத் தேர்தல் முறையாகும். நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல் நியாயமாகவும் நாணயமாகவும் பாரபட்சம் இல்லாமல் நடைபெற்றால் மட்டுமே ஜனநாயகம் தளைக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் சுயாதீனம் பெற்ற ஒரு தன்னாட்சியமைப்பாகும். அந்த அமைப்பின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய தேர்தல் ஆணையர்களுடைய சுதந்திரமான செயல்பாடுகள் 140 கோடி மக்களுடைய ஜனநாயக உரிமைகளைத் தீர்மானிக்கக் கூடியதாகும்.

இன்னும் சில நாட்களில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வேண்டிய சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவரான திரு.அருண் கோயல் அவர்கள் அந்த பொறுப்பிலிருந்து திடீர் என ராஜினாமா செய்துள்ளார்; அதை ஜனாதிபதி அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த 75 ஆண்டுக் கால வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக திடீரென்று ராஜினாமா செய்த வரலாறு இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் உள்ள மூன்று பேர் கொண்ட குழுவில் ஏற்கனவே இரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள். ஒரு இடம் காலியாகவே இருந்தது. தற்பொழுது அருண் கோயல் அவர்களும் ராஜினாமா செய்துள்ளார்; தற்பொழுது ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார்.

28 மாநிலங்களில் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்த வேண்டிய மிகப் பெரிய சவால் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் திரு.அருண் கோயல் அவர்கள் ராஜினாமா செய்திருப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த மிக முக்கியமான காலகட்டத்தில் அவர் ராஜினாமா செய்வதற்கு உண்டான என்ன சூழல் ஏற்பட்டது? என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அவருடைய ராஜினாமா பல்வேறு விதமான சந்தேகங்களையும் தவறான சமிக்கைகளையும் வெளிப்படுத்துவதைப் போலத் தோன்றுகிறது. மத்திய அரசும் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் ஒரு மிக முக்கியமான அமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பிலிருந்த அவர் ராஜினாமா செய்ததற்கு உண்டான காரணத்தை நாட்டு மக்களுக்கு விளக்கினால் மட்டுமே அது தேவையற்ற விவாதங்களையும், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும். வலுவான தேர்தல் ஆணையம் இருந்தால் மட்டுமே நேர்மையான தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். அதற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்த செயலும் ஏற்புடையதாகாது. எனவே, அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கான உண்மை காரணங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

Raid: 2-வது நாளாக ஆதவ் அர்ஜுன் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை...! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்...!

Sun Mar 10 , 2024
ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் வசிக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் வீடு, அவரது அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் சோதனையை மேற்கொண்டனர். ஆதவ் அர்ஜுன், கடந்த ஜனவரி மாதம்தான் விசிக-வில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. வி.சி.க. துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். வி.சி.க. […]

You May Like