சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, 69 மாவட்ட நீதிபதிகளை பல்வேறு பதவிகளில் வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்தும், 17 மூத்த சிவில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த பட்டியலில் தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் இடமாற்றம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது உயர் நீதிமன்றத்தின் (விஜிலென்ஸ்) பதிவாளராக உள்ளார். அதேபோல சென்னை, சிட்டி சிவில் நீதிமன்றத்தின் முதல் கூடுதல் நீதிபதியாக இருந்த டி.லிங்கேஸ்வரன், இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
எம் சாய் சரவணன், பதிவாளர் (விஜிலென்ஸ்) உயர்நீதிமன்றம், இடமாற்றம் செய்யப்பட்டு இப்போது திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதியாக உள்ளார். அதேபோல், பல மூத்த சிவில் நீதிபதிகள் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் திருப்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி புகழேந்தி, சேலம், மகளிர் நீதிமன்றம் அமர்வு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேன்கனிக்கோட்டை துணை நீதிபதியாக இருந்த கலைவாணி, சேலம் சிறப்பு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராணிப்பேட்டை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரபாவதி, ஒன்பதாவது கூடுதல் நீதிபதியாக (சிபிஐ வழக்குகள்) பதவி உயர்வு பெற்றுள்ளார்.