விமர்சனங்கள் என்ற பெயரில் வரும் எலிகளை சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை யானை கவுனியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, தற்போது திமுகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவர், ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களிலும் திமுகவை ஆதரித்து வாக்கு சேகரித்துள்ளார். மேலும், மறைந்த விஜயகாந்தை வடிவேலு மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் வடிவேலு, தற்போது மீண்டும் அரசியலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வடிவேலு, “முதலமைச்சர் முக.ஸ்டாலினால், பயனடையாத மக்களே கிடையாது. விமர்சனங்கள் என்ற பெயரில் வரும் எலிகளை சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடித்து வருகிறார். முதல்வர் இல்லை என்றால் தமிழே இன்று இருந்திருக்காது. காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதன் தாய்மொழியில் தான் கத்துகின்றன. அவற்றை மாற்றி கத்த சொன்னால் கத்துமா..? யார் யார் எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும். கட்டாயப்படுத்தக் கூடாது” என இந்தி மொழி திணிப்பு குறித்து வடிவேலு விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கலாச்சாரம் உள்ளது. ஒரு மொழி உள்ளது. எங்கள் தமிழ்நாட்டின் அடையாளமே தமிழ் தான். இந்த மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று முதல்வர் கூறியது, மக்களை நெகிழ வைத்துள்ளது. நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், திணிக்க வேண்டாம், புகுத்த வேண்டாம். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 சீட்டுக்கு மேல் பெற்று திமுக ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும் முக.ஸ்டாலினே முதல்வர் ஆவார்” என்று தெரிவித்துள்ளார்.