அணைக்கட்டு அருகே பள்ளி மைதானத்தில் ஓடிய 9ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற மாணவன், அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்தான். சம்பவத்தன்று வழக்கம்போல மாணவன் மோகன்ராஜ் பள்ளிக்குச் சென்றான். மதியத்துக்குப் பின்னர் அந்த மாணவனின் வகுப்புக்கு ஆசியர்கள் யாருமே வராததால், மாணவர்கள் கத்தி கூச்சலிட்டு அமர்க்களம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, ரவுண்ட்ஸ் வந்த தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அனைவரையும் கண்டித்ததுடன் சுமார் 40 மாணவர்களையும் பள்ளி மைதானத்தை 4 முறை சுற்றி ஓடிவருமாறு தண்டனை கொடுத்துள்ளார். மாணவர்கள் அனைவரும் ஓடியபோது, அதில் மோகன்ராஜுக்கு மட்டும் மூச்சிறைப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘தன்னால் ஓட முடியவில்லை’ என மாணவன் சொன்னபோதும், தலைமை ஆசிரியர் தொடர்ந்து ஓடச்சொன்னதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மூச்சிறைக்க ஓடிய மோகன்ராஜ் திடீரென சுருண்டு விழுந்துள்ளான்.

இதையடுத்து பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக அவனை மீட்டு அணைக்கட்டு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குத் தூக்கிச்சென்று முதலுதவி சிகிச்சையளிக்க உதவினர். பெற்றோருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்தனர். பெற்றோர் வந்த சிறிது நேரத்திலேயே மாணவனின் உயிர்ப் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்து கதறி அழுத பெற்றோர், போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமலேயே மாணவனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். தகவலறிந்ததும், அணைக்கட்டு காவல் நிலைய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மாணவன் உடலைக் கேட்டு வீட்டுக்குச் சென்றனர். பிரேதத்தை தர மறுத்த குடும்பத்தினர், தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், அந்த தரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.