காடுகள், புதர்கள், விவசாய நிலங்களில் ஏற்படும் தீயால் உலக அளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தால் வெள்ளம், அதிக மழை, வறட்சி போன்றவை உலகம் முழுவதும் பரவலாக நிலவுவதுபோல் காற்று மாசுபாடும் பரவலாகி வருகிறது. பொருளாதாரத்தில் வலுவான நாடுகளைவிடக் குறைவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளே காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு அதிகளவில் காற்று மாசுபாட்டை எதிர்கொண்டு வருகின்றன. மேலும், காற்று மாசுபாட்டால் சுவாசக் குழாய் நோய்ப் பாதிப்புகள், மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதாக நிபுணர்களும் கூறுகின்றனர்.
எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இந்திய தலைநகர் டெல்லி அதிக அளவிலான மக்கள் தொகை, போக்குவரத்து, தொழில் நிறுவனங்கள், குறுகிய பரப்பில் அதிக அளவிலான செயல்பாடுகளை கொண்டு இயங்கி வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் காற்று மாசுபாடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரம் அடைந்து வருகிறது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடால் மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையான பறவைகள், விலங்குகள் மற்ற வகை உயிரினங்களும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அளவுக்கு அதிகமான மழை, வெயில், அளவுக்கு அதிகமான பனி, நிலத்தினுடைய சூடு அதிகரிப்பு என்று டெல்லியின் தட்பவெட்ப நிலை மாற்றத்தைக் கண்டு இருக்கிறது.
இப்படி உலகம் முழுவதும் காற்று மாசுபாடுகளால் கடுமையாக பாதிப்படைந்து வரும் நிலையில், உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் ஒன்று உள்ளது. அதை பற்றி தெரிந்துகொள்வோம். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வியத்தகு சுற்றுலாத்தலம் உலகின் விளிம்பு, The Edge Of the World. கேப் கிரிப் எனும் டஸ்மேனியா தீபகற்ப பகுதிக்கு குறைவான சுற்றுலாப்பயணிகளே வருகின்றனர். இது தாஸ்மானியா தீவின் வடமேற்கில் அமைந்திருக்கிறது. இங்கு வந்தால் கறுப்பு மணல் இருக்கும் கடற்கரைகள், அதனை ஒட்டிய செங்குத்து மலை இறக்கங்கள், பண்ணைகள் அமைந்திருக்கும் மலை உச்சிகள் என பல இடங்களைப் பார்வையிடலாம்.
மொத்த உலகில் இருந்து தனித்து இருப்பதனால் இயற்கையழகு சேதமைடையாமல் இருக்கும் கேப் கிரிப், மிகவும் தூய்மையான காற்று இருக்கும் பகுதியாக திகழ்கிறது. இந்த பகுதியில் காற்று மாசை சோதிக்கும் நிலையம் ஒன்று உள்ளது. இதன் மூலம் தான் இது உலகின் தூய்மையான காற்று இருக்கும் பகுதி என்பதை நாம் அறிகிறோம். இந்த பகுதியில் உள்ள மலை உச்சிகளில் ஏறினால் அதிவேகத்தில் காற்றுவீசுவதை உணர முடியும். இங்கு மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசுமாம். இந்த காற்று எந்த இடையூறும் இல்லாமல், எதிலும் சேதமடையாமல், மாசுபடாமல் அண்டார்டிகாவில் இருந்து நேரடியாக வருகிறது.
பூமியின் தென்துருவத்தில் இருந்து புறப்படும் காற்று கேப் கிரிப்பை அடையும் வரை எந்த நிலப்பரப்பும் குறுக்கே இல்லாததால் உலகின் தூய்மையான காற்று மாதிரியை இங்கே காணலாம். அறிவியல் ஆய்வாளர்களும், சூழலியல் ஆர்வலர்களும் காற்றின் தரத்தை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகின்றனர். ஏற்கெனவே கூறியது போல வாகன புகை, தொழிற்சாலை புகையை குறைப்பதன் மூலம் மோசமான நிலையில் இருக்கும் நம் வளிமண்டலத்தை பலப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
உதாரணமாக பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க நம் அரசுகள் கூட நடவடிக்கை எடுப்பதைப் பார்த்து வருகிறோம்.
தூய்மையான காற்று சுற்றுசூழலைக் காப்பதுடன், மனிதர்களின் உடல் நலத்தையும் பாதுகாக்கிறது. இந்த ஊரின் காற்று மிகத் தூய்மையானதாக இருப்பதனால் பாட்டிலில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டில் வாங்கினால் நம்மால் 160 முறை சுவாசிக்க முடியும். இதன் விலை கிட்டத்தட்ட 1500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.