உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. நவீன மயமான இந்த காலகட்டத்தில் மனிதர்கள் அன்றாடம் பணி, தொழில் நிமித்தமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சர்வதேச சூழல் நெருக்கடிகள், மன உளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் தூக்கமின்மை தற்போது உலகளாவிய நோயாக மாறியுள்ளது. ‘எனக்கு தூக்கமே வராது’ என பலர் சொல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், தூக்கமின்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இதனால், தூக்கத்தின் அவசியத்தை முன்னிருத்தி கடந்த 2018இல் முதல் மார்ச் 17ஆம் தேதி உலக தூக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தூக்க தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களுக்கும் தூக்க விடுமுறை அளித்துள்ளது தனியார் நிறுவனம். பெங்களூருரை சேர்ந்த ஸ்டார்டப் நிறுவனமான வேக்ஃபிட் என்னும் வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விடுமுறையை அளித்துள்ளது.