சென்னை திருவான்மியூர் பேருந்து பணிமனையில், அரசுப் பேருந்துகள் இரவு நேரம் வழக்கம்போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர், குடிபோதையில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். இதை அங்கிருந்த ஊழியர்களும் கவனிக்கவில்லை. வழக்கமான டிரைவர் தான் பேருந்தை எடுத்துச் செல்கிறார் என நினைத்துவிட்டனர்.
இதற்கிடையே, பேருந்தை திருடிச் சென்ற போதை ஆசாமி, சோழிங்கநல்லூர் வழியாக செல்லும்போது பேருந்தை தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர், கிழக்கு கடற்கரை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி ஒருவழியாக நின்றது. திடீரென லாரி மீது பேருந்து மோதியதால் உள்ளே இருந்த லாரி டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போதை ஆசாமியை, போலீசிடம் போட்டுக் கொடுத்தார் லாரி டிரைவர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், பெசண்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம் (வயது 33) என்பதும், இவர் பேருந்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆபிரகராம் திருவான்மியூர் – ஊரப்பாக்கம் செல்லும் சென்னை மாநகர பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது டிக்கெட் சில்லறை தொடர்பாக நடத்துனருக்கும், ஆபிரகாமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகள் முன்னிலையில் ஆபிரகாமை நடத்துனர் கடுமையாக திட்டியுள்ளார். பின்னர், அவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார். இதனால், நடத்துனர் மீது கோபமடைந்துள்ளார் ஆபிரகாம். இதனால், எப்படியாவது பழிவாங்க வேண்டுமென நினைத்துள்ளார்.
இதனால், நேற்று நள்ளிரவில் மதுபோதையில் வந்து பஸ்சை கடத்திச் சென்றுள்ளார். ஆபிரகாம் மெக்கானிக் என்பதால், பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார். நல்வாய்ப்பாக பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. ஆனால், இதுதொடர்பாக ஆபிரகாமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை மற்ற நபர்கள் எப்படி எடுத்து செல்ல முடியும்..? அரசு ஊழியர்கள் இதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தனர்..? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், போலீசார் இதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.