திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் ஒருதலைக் காதலியின் தந்தையை காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் பெர்ச்சா கிராமம் வழியாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் சடலம் உடல் சிதறிய நிலையில் கிடந்தது. அங்கு நாட்டுத் துப்பாக்கி, பைக் உள்ளிட்டவையும் இருந்தன. தகவலறிந்த போலீசார், அந்த உடலை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி பவிஷ்யா பாஸ்கர் கூறுகையில், ”தேவாஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கான்ஸ்டபிள் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை. பெண்ணின் தந்தையும் அதற்கு தடையாக இருந்துள்ளார். அவர், வேறொருவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள், சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் தனது காதலியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காதலியின் தந்தையை சரமாரியாக சுட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே 55 வயதுடைய அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்த காதலிக்கும் காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய கான்ஸ்டபிள், அங்கிருந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக சென்ற அவர், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு செய்த துரோகத்திற்காக, கொலை செய்தேன்’ என்று தலைப்பிட்டு, தனது காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
பின்னர் ஷாஜாபூர் மாவட்டம் பெர்ச்சா கிராமம் வழியாக செல்லும் ரயில்வே பாதையில் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்தில் கைத்துப்பாக்கி, அவரது பைக் மீட்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.