கடன் சுமையால் கேரள பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால், கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கேரள அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாயை விட டீசல் செலவு அதிகரித்து வருவதால், நீண்ட தூர சேவைக்கான பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. கடன் சுமையால், பல்வேறு மாநிலத்தின் சாதாரண சேவை பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால், கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளா மாநில பேருந்துகள் இல்லாமல் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

குறிப்பாக, கோவையில் இருந்து கேரளாவுக்கு தொழில் சம்மந்தமாக செல்லும் பயணிகள், அதேபோல இரண்டு நாட்கள் தொடர் அரசு விடுமுறை என்பதால், சொந்த ஊருக்குச் செல்வதற்கும் உரிய பேருந்துகள் இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காக வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.