Zimbabwe: தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் மரண தண்டனை சட்டத்தை ரத்து செய்து அதிபர் எம்மர்சன் மங்காக்வா ஒப்புதல் அளித்துள்ளார்.
மனித உரிமைகளை நோக்கிய குறிப்பிடத்தக்க ஒரு அடியை ஜிம்பாப்வே நாடு எடுத்துள்ளது. அதாவது, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மரண தண்டனையை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வா(Emmerson Mnangagwa) ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மரண தண்டனைகள் சிறைத் தண்டனையாக மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை(Amnesty International) போன்ற மனித உரிமை குழுக்களால் இந்த முடிவு “ஒரு நம்பிக்கைச் சுடர்” என்று கொண்டாடப்பட்டாலும், அவசரநிலை காலங்களில் மரண தண்டனை மீண்டும் அமலுக்கு வரும் சாத்தியக்கூறு இந்த சட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் கடைசியாக ஒருவர் தூக்கிலிடப்பட்ட போதிலும், கொலை போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஜிம்பாப்வே நீதிமன்றங்கள் தொடர்ந்து மரண தண்டனை விதித்து வந்தன.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 60 பேர் மரண தண்டனைக்குரியவர்களாக இருந்தனர். இந்த நபர்கள் தற்போது மறு தண்டனை விதிக்கும் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் குற்றத்தின் தன்மை, மரண தண்டனை வரிசையில் செலவழித்த காலம் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை நீதிபதிகள் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Readmore: நடுவானில் சென்றபோது திடீர் புகை!. அவசரமாக தரையிறங்கிய விமானம்!. பணியாளர் ஒருவர் பலி!