கேரளா மாநிலம் கொட்டாரகரை தாலுகா மருத்துவமனையில் பெண் மருத்துவர் வந்தனா (25 ) பணியில் இருந்துள்ளார். அப்போது சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட குற்றவாளி சந்தீப் ( 45 ) என்பவர் பணியில் இருந்த மருத்துவர் வந்தனாவை கத்தரிக்கோல் பயன்படுத்தி பலமுறை குத்தியுள்ளார். இதனை பார்த்த போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து கட்டி வைத்தனர். அப்போது சந்தீப் தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண் மருத்துவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போதைக்கு அடிமையான குற்றவாளி சந்தீப் நெடும்பன் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆவார். வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றவாளி ஆன சந்தீப்பை நேற்றிரவு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தரிக்கோலால் இளம்பெண் மருத்துவரை குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை எனக்கூறி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர சிகச்சை பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் வேலை நிறுத்ததை அறிவித்துள்ளது.