வலங்கைமானில் பச்சிளம் குழந்தையை கட்டை பையில் போட்டு பாலத்தின் சுவற்றில் அடித்து கொலை செய்த தாய், சடலத்தை பாத்திரத்துக்குள் போட்டு மறைத்து வைத்த போது போலீசில் சிக்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் ரேணுகா. 33 வயதான இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 3 வருடங்களில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவர் முத்து தனியாக திருப்பூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ரேணுகாவிற்கும் முத்துவிற்கும் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையும் தன்னுடன் அழைத்துச்சென்ற ரேணுகா, தாய் வீட்டில் தங்கி குடவாசலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கமலேஷ் என்பவருக்கும் ரேணுகாவிற்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் நெருக்கமாக பழகியதால், ரேணுகா கர்ப்பமாகி உள்ளார். கடந்த 22ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேணுகாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த ஆண் குழந்தையை தாய் ரேணுகா தனது வீட்டில் பின்புறத்தில் உயிருடன் புதைத்ததாக காவல்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் மூலம் போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து, வலங்கைமான் காவல்துறையினர், வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரவீந்திர பாபு முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்தனர். இது குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தாய் ரேணுகா மற்றும் பாட்டி ரேவதி ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24ஆம் தேதி கட்டைப்பையில் குழந்தையை எடுத்துக்கொண்டு ரேணுகாவும் அவரது தாயும் பேருந்தில் ஏறி வலங்கைமானில் உள்ள வேடம்பூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கியுள்ளனர்.
அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் கட்டைப்பயுடன் குழந்தையை ஓங்கி அடித்துள்ளனர். இருப்பினும் குழந்தையிடம் இருந்து சன்னமான குரல் வந்துள்ளது. இதையடுத்து, வீட்டிற்கு வந்து குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். அதன் பின்னர் பாத்திரம் ஒன்றில் போட்டு குழந்தையின் சடலத்தை மூடி வைத்துள்ளனர். அடுத்த நாள் குழந்தையின் சடலத்தை கொல்லைப் புறத்தில் குழிதோண்டி தாயும் மகளும் புதைத்ததாகக் கூறும் காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.