கரூர் மாவட்டம் தாந்தோணி மலையை அடுத்த முத்தழாடம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல். 58 வயதான இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை அவர் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றிருக்கிறார். வீட்டுக்குள் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைப் பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்ததை தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்கவேல் மீது புகார் அளித்துள்ளார்.
பின்னர், தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, நீதிபதியின் உத்தரவை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைகள் முழுவதும் முடிந்து நீதிபதி நசிமா பானு தீர்ப்பு வழக்கியுள்ளார். குற்றவாளி சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.